முல்லைத்தீவு
முல்லைத்தீவு - மல்லாவி மற்றும் மாந்தை கிழக்கு பகுதிகளில் காணப்படும் உணவகங்கள் மற்றும் வியாபார நிலையங்களில் திடீர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த சோதனை நடவடிக்கை இன்று(17) பொதுச் சுகாதார பரிசோதகர்களினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் தொடர் முறைப்பாடுகளிற்கமைவாக மல்லாவி மற்றும் மாந்தை கிழக்கு பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இணைந்து மல்லாவி நகரில் அமைந்துள்ள பல்பொருள் வாணிபங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் மீது திடீர் சோதணையினை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது வியாபார நிலையங்களில் காலாவதி திகதி கடந்த உணவுப்பொருட்கள், வண்டு மொய்த்த உணவுப்பொருட்கள், சுட்டுத்துண்டு உருவழிக்கப்பட்ட உணவுப்பொருட்கள், சுட்டுத்துண்டு இடப்படாத வெளிநாடுகளில் இருந்து நேரடியாக இறக்குமதி செய்யப்பட்டு விற்பனைக்கென வெளிக்காட்டி வைக்கப்பட்ட உணவுப்பொருட்கள் மல்லாவி சுகாதார வைத்திய அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட பொருட்கள் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் ஒப்படைப்பதற்கு என சான்றுப்பொருட்களாக மல்லாவி சுகாதார வைத்திய அதிகாரி பணிமணைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளன.
இதேவேளை பொதுச் சுகாதார பரிசோதகர்களால் சுகாதார நடைமுறையின்றி உணவு பொருட்களை விற்பனை செய்த வர்த்தக நிலையங்களுக்கு எதிராக நாளைய தினம் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.